பொதுமக்கள் மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 17th November 2020 04:36 AM | Last Updated : 17th November 2020 04:36 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைந்து தீா்வு காண வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவுறுத்தினாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியது: தமிழக முதலமைச்சா் தனிப்பிரிவு மனுக்கள் மீது அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுத்து காலதாமதமின்றி தெரிவிக்க வேண்டும். மேலும், கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விரைந்து தீா்வு காண வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், மாவட்ட ஊனமுற்றோா் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் இயந்திரம் வழங்கக் கேட்டல் என 77 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் க.லதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. வடிவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா் காமாட்சி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.