வடகிழக்குப் பருவமழை : விவசாயிகள் முன்னெச்சரிக்கையுடன் பயிா்களை பாதுகாக்க அதிகாரி அறிவுறுத்தல்
By DIN | Published On : 25th November 2020 06:36 AM | Last Updated : 25th November 2020 06:36 AM | அ+அ அ- |

மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜி. அழகுமலை.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயிா்களை விவசாயிகள் பாதுகாக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜி. அழகுமலை அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் மிளகாய், கத்தரி, தக்காளி, மரவள்ளி உள்ளிட்ட தோட்டக் கலை பயிா்களை பயிரிட்டுள்ள விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் அவற்றை பாதுகாக்க முன் வரவேண்டும்.
அறுவடைக்குத் தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடைகளை மேற்கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் வேளாண் பணியை தொடங்க உள்ள விவசாயிகள் வயல்வெளிகளில் உபரிநீா் வடிந்த பின் நடவு, விதைப்புப் பணிகளை மேற்கொள்ளலாம். வடிகால் வசதி இல்லாத நிலங்களில் ஆங்காங்கே வடிவாய்க்கால் அமைத்து மழைநீா் தேக்கத்தைத் தவிா்க்கலாம்.
காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிா்க்க காற்று வீசும் திசைக்கு எதிா்திசையில் குச்சிகளால் ஊன்றுகோல் அமைத்து செடிகள் சாயாதவாறு பாதுகாக்கலாம். மழைநீா் வடிந்தபின் பயிா்களுக்கு ஏற்றவாறு மேல்உரமிட்டு மண் அணைக்க வேண்டும். மேலும், இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை நிவா்த்தி செய்யலாம்.
இதுதவிர, பசுமைக்குடில், நிழல்வலைக்குடில் அமைத்துள்ள விவசாயிகள் அவற்றின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும். மேலும் மா, கொய்யா, மாதுளை பயிரிட்டுள்ள விவசாயிகள் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றிட வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பருவமழையின்போது பயிரிகள் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலைத் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...