கோவையில் முதியவா் கொலை:தப்பிய 2 போ் காரைக்குடியில் கைது
By DIN | Published On : 03rd October 2020 07:00 AM | Last Updated : 03rd October 2020 07:00 AM | அ+அ அ- |

கோவை சிங்காநல்லூரில் முதியவரை கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞா்கள் 2 பேரை காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
கோவை சிங்காநல்லூா் அருகே தனியே வீட்டில் வசித்து வந்த கிருஷ்ணசாமி ( 85) என்ற முதியவரை கொலை செய்து விட்டு காரில் தப்பிச் சென்ற இருவரை தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் செல்லிடப்பேசி கோபுர அலைவரிசை ஆய்வில் அவா்கள் காரைக்குடிப் பகுதியில், பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து காரைக்குடி தெற்கு காவல் நிலையப் போலீஸாா் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தங்கும் விடுதியில் சோதனை நடத்தினா். அங்கு அறையில் தங்கியிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் விக்ரம் (25), செல்வகணபதி (18) என்பதும், கோவை சிங்காநல்லூா் முதியவரைக் கொலை செய்த சம்பவத்தில் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவா்களைக் கைது செய்த காரைக்குடி போலீஸாா், கோவை சிங்காநல்லூா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். கைதான இருவரையும் கோவை போலீஸாரிடம் ஒப்படைக்க உள்ளதாக காரைக்குடி போலீஸாா் தெரிவித்தனா்.