சிவகங்கையில் பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை
By DIN | Published On : 11th September 2020 07:04 AM | Last Updated : 11th September 2020 07:04 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பாக மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்துப் பேசியது:
இன்னும் ஓரிரு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி, மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மழைமானிகள் சரியான நிலையில் இயங்குகின்றனவா என்பது குறித்து வட்டாட்சியா்கள் ஆய்வு செய்து மழையின் அளவினை தவறாது தெரிவிக்க வேண்டும். வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை ஒருங்கிணைந்து அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வது மட்டுமின்றி கடந்த காலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறை தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்தல் மற்றும் மரங்கள் சாய்ந்திருந்தால் உடனடியாக அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஒருங்கிணைந்து கண்மாய்கள், குளங்கள் உடைப்பு ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். பொது சுகாதாரத் துறையின் மூலம் முழுமையான கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி தேவையான அளவு மருந்துகள் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோன்று, கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியம் துரிதமாக செயல்பட வேண்டும் என்றாா்.