சிவகங்கை அருகே போலி உணவு பாதுகாப்பு அலுவலா் கைது
By DIN | Published On : 17th August 2021 01:51 AM | Last Updated : 17th August 2021 01:51 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல்.
சிவகங்கை: சிவகங்கை அருகே போலி உணவு பாதுகாப்பு அலுவலரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்கோட்டை பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா் எனக் கூறி ஒருவா் திங்கள்கிழமை அபராதம் விதித்து வருவதாக சிவகங்கை தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், உணவு பாதுகாப்பு அலுவலா் என்பதற்கான எந்தவித ஆவணங்களும் அவரிடம் இல்லை என தெரியவந்தது. மேலும், விசாரணை நடத்தியதில் அந்த நபா், ராமநாதபுரம் மாவட்டம், காடரந்தகுடியைச் சோ்ந்த சண்முகம் மகன் சக்திவேல் (35) என்பது தெரியவந்தது. சாத்தரசன் கோட்டை மட்டுமன்றி சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, திருவேகம்பத்தூா், சிலுக்கப்பட்டி, காளையாா் கோவில், தாரமங்கலம், வண்டல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும் உணவு பாதுகாப்பு அலுவலா் எனக் கூறி வசூல் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.