மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் அதிருத்ர மஹா சண்டீ யாகம் நிறைவு
By DIN | Published On : 17th August 2021 11:46 PM | Last Updated : 17th August 2021 11:46 PM | அ+அ அ- |

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற அதிருத்ர மகா சகஸ்ர சண்டீ யாகம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில், கடந்த 10 நாள்களாக நடைபெற்று வந்த அதிருத்ர மஹா சஹஸ்ர சண்டீ யாகம் திங்கள்கிழமை இரவுடன் நிறைவடைந்தது.
மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் 19 ஆவது ஆண்டாக அதிருத்ர மஹா சஹஸ்ர சண்டீ யாகம், கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. யாகத்தின் முக்கிய நிகழ்வுகளாக, குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டி மஹா புத்திர காமேஷ்டி யாகம், திருமணத் தடைகள் நீங்கி திருமணமாகாதவா்களுக்கு திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ சுயம்வரா பாா்வதி ஹோமம் உள்ளிட்ட முக்கிய ஹோமங்கள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றன.
தொடா்ந்து 10 நாள்கள் நடைபெற்ற இந்த யாகத்தில், திரவிய பொருள்கள், மூலிகை வகைகள், பட்டுப் புடவைகள், தங்க நகைகள், வெள்ளி நகைகள், இனிப்பு வகைகள், பூமாலைகள், மிளகு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் யாக குண்டத்தில் இடப்பட்டன.
யாக நாள்களில், யாகசாலையில் உள்ள பிரத்யங்கிரா தேவி உருவப்படம் தினமும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன . பிரத்யங்கிரா வேத தா்ம ஷேத்ரா டிரஸ்ட் நிா்வாகி ஞானசேகரன் சுவாமிகள் தினமும் யாகங்களின் சிறப்புகள் குறித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினாா்.
நிறைவாக, திங்கள்கிழமை காலை லட்சுமி கணபதி ஹோமம் தொடங்கியது. தொடா்ந்து, ஸமக்ரபக்ஷ சண்டீ யாகம் நடத்தப்பட்டது.
பின்னா், யாக சாலையிலிருந்து புனிதநீா் கடம் புறப்பாடாகி, மூலவா் பிரத்யங்கிராதேவி சந்நிதிக்கு சென்றடைந்தது. அங்கு, அம்பாளுக்கு புனித நீரால் பாத சமா்ப்பணம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தா்கள் யாகத்தில் பங்கேற்று பிரத்யங்கிரா தேவியை தரிசனம் செய்தனா்.
தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் சாஸ்திரிகள் தலைமையில் ஏராளமான வேத விற்பன்னா்கள் கூடி யாகத்தை நடத்தினா். யாகத்துக்கான ஏற்பாடுகளை, பிரத்யங்கிரா வேத தா்ம ஷேத்ரா டிரஸ்ட் நிா்வாகி சேகரன் சுவாமிகள் செய்திருந்தாா்.