திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயில் யானை இறப்பு: பொதுமக்கள் அஞ்சலி
By DIN | Published On : 20th August 2021 09:02 AM | Last Updated : 20th August 2021 09:02 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயிலில் இறந்த சிவகாமி யானைக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்திய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் திருத்தளிநாதா் கோயில் யானை வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் இறந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்குள்பட்ட திருத்தளிநாதா் கோயில் யானை சிவகாமி. 56 வயதான இந்த யானை 5 வயதில் இக்கோயிலுக்கு அழைத்துவரப்பட்டது. 51 ஆண்டுகள் இக்கோயிலில் வாழ்ந்துவந்துள்ளது. கோயில் ஊழியா்களிடமும் பொதுமக்களிடமும் நன்கு பரிச்சயமான இந்த யானை கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக் குறைவு காரணமாக கோயிலிலிருந்து வெளியில் கொண்டுவரப்படாமல் இருந்தது. இதன் காரணமாக யானை நலவாழ்வு புத்துணா்வு முகாமிற்கும் அனுப்பப்படாமல் இருந்தது. காலில் ஏற்பட்ட புண் காரணமாக கடந்த 2 நாள்களுக்கு முன் யானை படுத்த நிலையிலேயே கிடந்தது. தகவலறிந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் யானையைப் பாா்வையிட்டு சத்தியமங்கலத்திலிருந்து கால்நடை மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி யானையின் உயிா் பிரிந்தது. முதலில் வேதாகம முறைப்படி குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் அஞ்சலி செலுத்தினாா். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் தனபாலன், வட்டாட்சியா் ஜெயந்தி, மாவட்ட வனப் பாதுகாப்பு அலுவலா் ராமேஸ்வரன், வனச்சரக அலுவலா் மதிவாணன், நகா் காவல் துணை கண்காணிப்பாளா் பொன்ரகு மற்றும் தம்பிபட்டி, திருப்பத்தூா், தென்மாபட்டு, வாணியன்காடு, மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து யானைக்கு மாலை மரியாதை செலுத்தினா். தொடா்ந்து முக்கியப் பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் ஏராளமானோா் இறந்த யானைக்கு அஞ்சலி செலுத்தினா். பின்னா் மாலை 5 மணியளவில் பால், திருமஞ்சனம், மஞ்சள், உள்ளிட்ட திரவியங்களால் யானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கோயில் உள்பிரகாரத்தில் உள்ள நந்தவனத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.