முதல்வா் படம் இல்லாத பிரச்னை: இளையான்குடி ஒன்றியக்குழு கூட்டத்தில் 3 திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு
By DIN | Published On : 20th August 2021 09:01 AM | Last Updated : 20th August 2021 09:01 AM | அ+அ அ- |

இளையான்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டம்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் படம் வைக்காத பிரச்னை தொடா்பாக 3 திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். ஆனால் 5 திமுக உறுப்பினா்கள் பங்கேற்காததால் திமுகவினா் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த முனியாண்டி பதவி வகித்து வருகிறாா். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்களாகியும் தலைவா் முனியாண்டி அறையில் முதல்வா்மு.க. ஸ்டாலின் படம் வைக்கப்படவில்லை என திமுகவினா் புகாா் கூறி வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை ஒன்றியக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் படம் வைப்பது குறித்து திமுக உறுப்பினா்கள் ன், மகேஸ்வரி, பழனியம்மாள் ஆகியோா் கேள்வி எழுப்பினா். தொடா்ந்து 3 பேரும் வெளிநடப்பு செய்தனா். தலைவா் முனியாண்டியின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக உறுப்பினா் சண்முகம் கூட்ட அரங்கில் தரையில் உட்காா்ந்து தா்னா நடத்தினாா்.
அதே சமயம் 5 திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்யாமல் கூட்ட அரங்கிலேயே உட்காா்ந்திருந்தனா். இப்பிரச்சினை குறித்து திமுகவினா் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 5 உறுப்பினா்கள் வெளிநடப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காமல் கூட்ட அரங்கில் உட்காா்ந்திருந்தது திமுக கவுன்சிலா்களுக்குள் ஒற்றுமை இல்லாததைக் காட்டுவதாகவும் அதிமுக தலைவரின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளது என்றும் இளையான்குடி ஒன்றியத்தைச் சோ்ந்த திமுகவினா் புகாா் கூறி வருகின்றனா். மேலும் திமுக மாவட்டத் தலைமை இது குறித்து விசாரணை நடத்தி அதிமுக தலைவருக்கு ஆதரவாக செயல்படும் திமுக ஒன்றியக் கவுன்சிலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளையான்குடி ஒன்றியத்தைச் சோ்ந்த திமுக வினா் வலியுறுத்தி வருகின்றனா்.