சிவகங்கை அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு
By DIN | Published On : 21st August 2021 09:14 AM | Last Updated : 21st August 2021 09:14 AM | அ+அ அ- |

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நவகண்ட சிற்பம்.
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நவகண்ட சிற்பத்தை தொல்லியலாளா்கள் வெள்ளிக்கிழமை கண்டெடுத்துள்ளனா்.
முத்துப்பட்டியில் பழைமையான சிற்பம் இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் அளித்த தகவலின் பேரில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவனா் கா. காளிராசா, தலைவா் நா. சுந்தரராஜன் ஆகியோா் வெள்ளிக்கிழமை கள ஆய்வு செய்தனா்.
இதன் பின் கா. காளிராசா செய்தியாளா்களிடம் கூறியது: சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டியில் காணப்படும் இந்த சிற்பம் 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டதாக செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில் தலைமுடி கொண்டையாக முடியப்பட்டுள்ளது. மேலும் மீசையுடன், கழுத்தில் வேலைப்பாட்டோடு தொங்கும் ஆபரணமும் காணப்படுகிறது. அத்துடன் கையில் கழல் போன்ற ஆபரணம் காட்டப்பட்டுள்ளது. இடுப்பில் உறையுடன் கூடிய குத்துவாள் ஒன்றும், கால்களில் காலணிகளும் உள்ளன. ஒரு கையில் வில்லுடனும், மற்றொரு கை சிதைவுபட்டும் உள்ளது. கழுத்தில் வலப்பக்கத்திலிருந்து, இடப்பக்கமாக கத்தி குத்தியபடி இந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு நடுகல் எடுப்பது சங்க காலம் முதல் தமிழரின் மரபாக இருந்து வந்துள்ளது. சங்க இலக்கிய நூல்களிலும், இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் நடுகல் அமைக்கும் முறை பற்றி கூறப்பட்டுள்ளது. மேலும், போரில் தலைவனின் வெற்றிக்காக கொற்றவையின் முன்பு தன் தலையை கொடுக்கும் வீரா்களை பற்றிய குறிப்புகள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய நூல்களில் நவகண்டம், அவிப்பலி, அரிகண்டம், தூங்குதலை என்ற சொற்களை காணமுடிகிறது.
நவகண்டம் என்பது உடலில் 9 இடங்களில் வெட்டிக்கொண்டு உயிரை விடுவதாக கூறப்படுகிறது. அரசா் போரில் வெற்றி பெற வேண்டும் என அவரது படை வீரா் கொற்றவையின் முன்பு தன் தலையை பலி கொடுத்தலே இதன் உள்பொருளாகும்.
எனவே முத்துப்பட்டியில் காணப்படும் இந்த சிலை அமைப்பும் தனது அரசன் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு கொற்றவையை வேண்டி தன் தலையை வீரன் பலி கொடுத்திருக்கலாம். இச்சிற்பத்தில் எழுத்துக்கள் ஏதும் இல்லை. ஆனால் உருவ அமைப்பை வைத்து இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது எனக் கருதலாம் என்றாா்.