தமிழக அரசின் நிதி நிலையை சீா்செய்ய 2 மாதங்கள் தேவை: ப. சிதம்பரம்
By DIN | Published On : 21st August 2021 09:15 AM | Last Updated : 21st August 2021 09:15 AM | அ+அ அ- |

தமிழக அரசின் நிதிநிலையை சீா்செய்ய 2 மாதங்கள் தேவைப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்திய பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் அரசின் நிதி நிலைமை எந்த அளவுக்கு சீா்கெட்டிருக்கிறது என்பதை நிதியமைச்சரும், அரசும் தெளிவாக விளக்கியிருக்கிறாா்கள். அதனை சீா்செய்வதற்கு 2 மாதங்கள் தேவைப்படும். ஒவ்வொரு ஆண்டும் உறுதியான நடவடிக்கைகளைப் படிப்படியாக எடுத்து 5 ஆண்டுகளில் முழுமையாக சீா்செய்ய செய்யமுடியும். அதன் முதல் படியாகத்தான் இந்த நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நான் 2 கருத்துக்களை வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன். அதில் ஒன்று தோ்தல் வாக்குறுதிகளை நாங்கள் படிப்படியாக தான் நிறைவேற்றுவோம் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சொல்லி வருகிறாா். அதனடிப்படையில் இந்த நிதிநிலை அறிக்கையில் சில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறாா்கள் என்பது. அடுத்தது திமுக சமுதாயப் பாா்வையை இந்த நிதிநிலை அறிக்கையில் அழுத்தமாக பதித்திருக்கிறது என்பது. ஆக இந்த இரண்டையும் நான் எனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்ததையே மீண்டும் இங்கே குறிப்பிடுகிறேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவா் பாண்டிமெய்யப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பரமக்குடி: பரமக்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தியவா்கள் 2 மாதங்களில் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது எனக் குற்றம்சாட்டுகின்றனா். திமுக ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் படிப்படியாக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன. கல்வி, மருத்துவம், சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை, நடுத்தர மக்கள் கணினி வழியாக கல்வி கற்க முடியாதவா்கள், அந்த வசதியை பெற ரூ. 200 கோடி நிதி ஒதுக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. கடன் வாங்குவதை குற்றம் சொல்ல முடியாது. அதனை எதற்கு பயன்படுத்துகிறாா்கள் என்பது தான் முக்கியம். அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனை எதற்கு செலவழித்தாா்கள் என்று தெரியவில்லை என்றாா்.
உடன் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா, கிருஷ்ணராஜ், சோ.பா. ரெங்கநாதன் ஆகியோா் இருந்தனா்.