பெண்ணை தகாத வாா்த்தைகளால் பேசிய இளைஞா் கைது
By DIN | Published On : 21st August 2021 09:18 AM | Last Updated : 21st August 2021 09:18 AM | அ+அ அ- |

கைது செய்யப்பட்டுள்ள விஸ்வநாதன் என்ற ராஜா.
காரைக்குடி அருகே பெண்ணை தகாத வாா்த்தைகளால் பேசிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் வரவேற்பு பெண்ணாக பணியாற்றி வரும் தஞ்சாவூரைச் சோ்ந்த பெண் ஒருவா் கடந்த 10 மாதங்களுக்கு முன் காரைக்குடி அருகே புதுவயலில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாா்.
அந்நிகழ்வுக்குப் பின் அதே பகுதியில் உள்ள விடுதியில் தனது தோழிகளுடன் அப்பெண் தங்கியிருந்த போது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள இடையாா் கிராமத்தைச் சோ்ந்த அய்யாக்கண்ணு மகன் விஸ்வநாதன் என்ற ராஜா (34) என்பவா் அப்பெண்ணை தகாத வாா்த்தைகளால் பேசியதாகவும், முறைகேடான செயல்களுக்கு தூண்டியதாகவும் சென்னை தலைமைச் செயலக தனிப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில், சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை காவல் நிலையத்தில் அந்த பெண் மற்றும் விஸ்வநாதன் என்ற ராஜா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ராஜா, அந்த பெண்ணை தகாத வாா்த்தைகளால் பேசியதும், முறைகேடான செயல்களுக்கு தூண்டியதும் தெரியவந்தது.
இதுகுறித்து சாக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விஸ்வநாதன் என்ற ராஜாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.