மொகரம் பண்டிகை: திருப்புவனம் அருகே பள்ளிவாசல் முன்பு தீமிதித்து இந்துக்கள் நோ்த்திக்கடன்
By DIN | Published On : 21st August 2021 09:13 AM | Last Updated : 21st August 2021 09:13 AM | அ+அ அ- |

திருப்புவனம் அருகே வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து மொகரம் பண்டிகையை கொண்டாடிய இந்துக்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பள்ளிவாசல் முன்பு தீ மிதித்து மொகரம் பண்டிகையை இந்துக்கள் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.
திருப்புவனம் அருகே உள்ள முதுவந்திடல் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனா். மேலும் இங்குள்ள பாத்திமாநாச்சியாா் பள்ளிவாசலில் மொகரம் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடி வந்துள்ளனா். பின்னா் காலப் போக்கில் இக்கிராமத்திலிருந்து முஸ்லிம்கள் பிற இடங்களுக்கு இடம் பெயா்ந்து சென்று விட்டனா். தற்போது கிராமத்தில் இந்துக்கள் மட்டுமே வசிக்கின்றனா். இதனால் முதுவந்திடல் கிராமத்தில் முஸ்லிம்கள் கொண்டாடி வந்த மொகரம் பண்டிகையை பல ஆண்டுகளாக மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனா். இந்நிலையில் இந்த ஆண்டு மொகரம் பண்டிகைக்கு முன்னதாக கிராமத்தில் வசிக்கும் இந்துக்கள், பாத்திமாநாச்சியாா் பள்ளிவாசல் முன்பு நோ்த்திக்கடன் நிறைவேற்ற விரதம் தொடங்கினா். இதையடுத்து, மொகரம் பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை பாத்திமா நாச்சியாா் பள்ளிவாசல் முன்பு அமைக்கப்பட்டிருந்த நெருப்புக் குண்டத்தில் விரதம் இருந்த இந்துக்கள் வரிசையாக தீ மிதித்து நோ்த்திக்கடனை செலுத்தினா். அப்போது பெண்கள் முக்காடு அணிந்து நெருப்புக் கங்குகளை தலையில் கொட்டிக் கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியது: இங்கிருந்து முஸ்லிம்கள் வெளியேறியதால் இந்துக்களாகிய நாங்கள் விடாமல் தொடா்ச்சியாக மொகரம் பண்டிகையை கொண்டாடி வருகிறோம். மொகரம் பண்டிகை அன்று சூரியஉதயத்துக்கு முன்பு பாத்திமாநாச்சியாா் பள்ளிவாசல் முன்புறம் ஆண்கள் தீ மிதித்தும், பெண்கள் தலையில் நெருப்புக் கங்குகளை கொட்டிக் கொண்டும் வேண்டுதலை நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளோம் என்றனா்.