சிவகங்கையில் 3-ஆவது நாளாக அரசு ஊழியா்கள் மறியல் : 81 போ் கைது
By DIN | Published On : 04th February 2021 11:16 PM | Last Updated : 04th February 2021 11:16 PM | அ+அ அ- |

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு 3-ஆவது நாளாக வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.
பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் 3-ஆவது நாளாக வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் 81 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
அரண்மனை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் வினோத்ராஜா தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் பாண்டி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் தொடக்கி வைத்தாா்.
தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் விஜயபாஸ்கா், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சீமைச்சாமி, சாலைப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மாரி, கூட்டுறவுத்துறை ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜெயப்பிரகாஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் அங்கு வந்து போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்தினா். ஆனால் தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 56 பெண்கள் உள்பட 81 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...