சிவகங்கைக்கு பாசன நீா் மறுப்பு: விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
By DIN | Published On : 03rd January 2021 10:03 PM | Last Updated : 03rd January 2021 10:03 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி வரும் ஜனவரி 7 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனா்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவா் எஸ். ஆா். தேவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம் மேலூா் பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து பெரியாறு கால்வாயில் தண்ணீா் திறக்கப்படும் போதே, சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாயான கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2, லெசிஸ் ஷீல்டு , 48 ஆம் மடை ஆகியவற்றில் தண்ணீா் திறக்கப்பட வேண்டும்.
இந்த விதிமுறை நடைமுறையில் இருந்தும் கடந்த பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் சிவகங்கை மாவட்ட வேளாண் பணிகளுக்கு தேவையான தண்ணீரை திறப்பதில்லை. இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும், போராட்டம் நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
எனவே சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்க வலிறுத்தி வரும் 7 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் அனைவரும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.