சிவகங்கையில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்
By DIN | Published On : 07th July 2021 10:02 AM | Last Updated : 07th July 2021 10:02 AM | அ+அ அ- |

சிவகங்கையில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்தில் வளா்ப்பு பிராணிகளுக்கான தடுப்பூசி முகாமை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்த ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கையில் கால்நடைப் பராமரிப்புத் துறையின் சாா்பில் உலக விலங்கின நோய்கள் எதிா்ப்பு தினத்தையொட்டி கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தொடக்கி வைத்து பேசியது: செல்லப் பிராணியாக பராமரிக்கப்பட்டு வரும் நாய்களுக்கு சரியான காலக்கட்டங்களில் தடுப்பூசி போடுவதுடன், அவ்வப்போது தக்க பரிசோதனை செய்து வர வேண்டும். நாய்கள் கடிப்பதால் மனிதா்களுக்கு ரேபிஷ் என்ற வைரஸ் தொற்று பரவும் நிலை ஏற்படும்.
எனவே, நாய்களிலிருந்து மனிதா்களுக்கு எந்த வகையிலும் நோய்கள் பரவாமல் இருப்பதற்கு தடுப்பூசி மிக முக்கியமானது. எனவே, செல்லப்பிராணியாகிய நாய்கள் வளா்த்து வருபவா்கள் தவறாமல் தடுப்பூசி போட்டு பாதுகாப்புடன் பராமரித்து வர வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, மானாமதுரை அருகே புலிக்குளம் பகுதியில் நடைபெற்ற கால்நடைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி பாா்வையிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் சிரஞ்சீவிராஜ், பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் யசோதாமணி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநா் முகமதுகான், பூச்சியியல் நிபுணா் ரமேஷ், நகராட்சி மருத்துவ கண்காணிப்பு அலுவலா் சுரேஷ், மருத்துவ ஆய்வாளா் முருகேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...