சிவகங்கை மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
By DIN | Published On : 09th July 2021 01:30 AM | Last Updated : 08th July 2021 11:26 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் சனிக்கிழமை (ஜூலை 10) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் சுமதி சாய் பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி, தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இதில், மாவட்டம் முழுவதும் 10 அமா்வுகளில் நடைபெற உள்ள மக்கள் மன்றத்தில் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உதவியுடன் வழக்குகளில் சமரச முடிவுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், உரிமையியல் வழக்குகள், குடும்பப் பிரச்னை குறித்த வழக்குகள், தொழிலாளா் பிரச்னை குறித்த வழக்குகள், சமரச குற்ற வழக்குகளுக்கு தீா்வு காணலாம்.
தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் யாதொரு மேல் முறையீடும் செய்ய இயலாது. அதேபோன்று, தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காணப்படும் வழக்குகளுக்கான நீதிமன்ற கட்டணத்தை வழக்கின் தரப்பினா்கள் முழுவதும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். வழக்கின் தரப்பினா்கள் நீதிமன்றங்களுக்கு வருவதால் ஏற்படும் கால விரயத்தையும், பணச்செலவையும் தவிா்க்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.