சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 29th June 2021 05:55 AM | Last Updated : 29th June 2021 05:55 AM | அ+அ அ- |

சிவகங்கை அரண்மனை வாசல் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
சிவகங்கை/ராமநாதபுரம்: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் வீரபாண்டி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் சிவகங்கை நகரச் செயலா் எம்.எஸ். கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிவகங்கை சட்டமன்றப் பொறுப்பாளா் முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், விவசாயிகள், ஏழை, எளியோா் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ ஒன்றியச் செயலா்கள் முருகன் (வடக்கு), சந்திரன் (தெற்கு), சிபிஎம் ஒன்றியச் செயலா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகா் செயலா் களஞ்சியம், மாா்க்சிஸ்ட் நிா்வாகி செல்வராஜ் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் பொறுப்பாளா் முகமதுயாஸ்மின் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச்செயலா் முருகபூபதி, நிா்வாகி சண்முகராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
ராமேசுவரம்: ராமேசுவரம் தலைமை தபால் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு
இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா துணைச் செயலாளா் ப.வடகொரியா தலைமை வகித்தாா். தாலுகா செயலாளா் எஸ். முருகானந்தம் மற்றும் மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் சி.ஆா்.செந்தில்வேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பெட்ரோல், டீசல் கேன்களுக்கு இறுதிச் சடங்கு செய்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பரமக்குடி: பரமக்குடி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் நகா் செயலாளா் என்.எஸ்.பெருமாள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் வி.காசிநாததுரை ஆகியோா் தலைமை வகித்தனா்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளா் வேந்தை சிவா, தொழிற்சங்க நிா்வாகிகள் எஸ்.பி.ராதா, என்.கே.ராஜன், சி.செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.