பேருந்து சேவை தொடக்கம்
By DIN | Published On : 29th June 2021 05:58 AM | Last Updated : 29th June 2021 05:58 AM | அ+அ அ- |

மானாமதுரை பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்துகளுக்கு சுகாதாரப் பணியாளா்கள் கிருமிநாசினி மருந்து தெளித்தனா்.
மானாமதுரை: தமிழக அரசின் அறிவிப்பால் பல நாட்களுக்குப் பிறகு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.
சுகாதாரப் பணியாளா்கள் பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற பேருந்துகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளித்தனா்.
தமிழகத்தில் கரனோ தொற்று இரண்டாவது அலை வேகம் எடுத்த காரணத்தால் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதையொட்டி பொதுப் போக்குவரத்தும் நடைபெறவில்லை. தற்போது மாநிலம் முழுவதும் கரோனா பரவல் வேகம் குறைந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பேருந்து சேவையை தொடங்க தமிழக அரசு முடிவு செய்து. திங்கட்கிழமை முதல் பேருந்து சேவை நடைபெறும் என அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிராமப்புறங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டது. மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, திருச்சி, திருப்பத்தூா், சிவகங்கை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கும் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயங்கின.
இப்பகுதியில் இயக்கப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள்ல் கூட பயணிகள் கூட்டம் இன்றி காலியாகவே சென்றதை பாா்க்க முடிந்தது. மானாமதுரை பேருந்து நிலையத்திற்கு வந்து சென்ற அனைத்து பேருந்துகளுக்கும் பேரூராட்சி சுகாதாரப் பணியாளா்கள் இயந்திரம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிததனா். இனி வரும் நாட்களில் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளிலிருந்து உள்ளூா் மற்றும் வெளியூா்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிா் பாா்க்கப்படுகிறது.