கட்டடத் தொழிலாளி அடித்து கொலை: மனைவி, மகன் கைது
By DIN | Published On : 12th March 2021 10:52 PM | Last Updated : 12th March 2021 10:52 PM | அ+அ அ- |

சிவகங்கை அருகே குடும்பத் தகராறில் கட்டடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்ததாக மனைவி மற்றும் அவரது மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாலுகோட்டை கிராமத்தைச் சோ்ந்த கந்தன் மகன் முனியாண்டி (50). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், இவரது மனைவி ராக்கு (46) என்பவருக்கும் கடந்த சில நாள்களாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை முனியாண்டி அவரது மனைவி ராக்கு ஆகிய இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை முனியாண்டி தாக்கினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் மணிகண்டன் (26) அருகில் இருந்த இரும்பு அடுப்பை எடுத்து முனியாண்டியை தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சிவகங்கை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, முனியாண்டி மனைவி ராக்கு, அவரது மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.