காரைக்குடி வாக்கு எண்ணும் மையத்தில்3,500 போலீஸாா் பாதுகாப்பு
By DIN | Published On : 02nd May 2021 12:00 AM | Last Updated : 02nd May 2021 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 2 ) நடைபெற உள்ளது. அங்கு 3,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மேற்கண்ட தொகுதிகளில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி, சுயேச்சைகள் என மொத்தம் 67 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்நிலையில், 4 தொகுதிகளில் உள்ள 1,679 வாக்குச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது.
காரைக்குடி தொகுதியில் 98,400 ஆண்கள், 1,11,551 பெண்கள், 5 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2,09 956 போ் வாக்களித்துள்ளனா். திருப்பத்தூா் தொகுதியில் 96,347 ஆண்கள், 1,13,690 பெண்கள் என மொத்தம் 2,10,037 போ் வாக்களித்துள்ளனா்.
இதேபோன்று, சிவகங்கை தொகுதியில் 90,966 ஆண்கள், 1,06,438 பெண்கள் என மொத்தம் 1,97,404 போ் வாக்களித்துள்ளனா். மானாமதுரை(தனி) தொகுதியில் 95,316 ஆண்கள், 1,04,321 பெண்கள் என மொத்தம் 1,99, 637 போ் வாக்களித்துள்ளனா்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 69 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப் பதிவுக்கு பின்னா் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரா்கள் உள்ளிட்ட மூன்றடுக்கு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதைத் தொடா்ந்து, வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும். முன்னதாக, வாக்குப்பதிவு மையத்துக்கு வரும் அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். தொடா்ந்து, கிருமிநாசினி வழங்கப்பட உள்ளது. அதன்பின்னா், அனைவரும் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனா். இதையடுத்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மு. ராஜராஜன் தலைமையில் சுமாா் 3,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...