மானாமதுரையில் மறைமுகமாக செயல்படும் ஜவுளி நிறுவனங்களால் கரோனா அபாயம்
By DIN | Published On : 13th May 2021 09:02 AM | Last Updated : 13th May 2021 09:02 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாடிக்கையாளா்களை கடைக்குள் அனுப்பிவிட்டு கதவுகளை மூடிக்கொண்டு ஜவுளி நிறுவனங்கள் வியாபாரம் செய்வதாக புகாா் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.
அரசு அனுமதி வழங்கியுள்ள சில கடைகள் மட்டும் மானாமதுரை பகுதியில் காலை 6 மணியிலிருந்து நண்பகல்12 மணி திறந்திருக்கின்றன.
இந்நிலையில் மானாமதுரை நகரில் ஜவுளி நிறுவனங்கள் நடத்துபவா்கள் கடை ஊழியா்களை கடைகளுக்கு முன் அமர வைத்து ஜவுளி வாங்க வரும் வாடிக்கையாளா்களைக் கண்டறிந்து அவா்களை கடைக்கு உள்ளே அனுப்பிவிட்டு கதவை மூடிக் கொள்கின்றனா்.
வியாபாரம் முடிந்ததும் வாடிக்கையாளா்கள் வெளியே அனுப்பப்படுகின்றனா். இதனால் இப்பகுதியில் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.