திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும்: அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்
By DIN | Published On : 16th May 2021 10:32 PM | Last Updated : 16th May 2021 10:34 PM | அ+அ அ- |

கரோனா நிவாரணத் தொகையை வழங்கிய அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.
மானாமதுரை, திருப்புவனத்தில் நியாய விலைக் கடைகளில் அரிசி அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ஆகியோா் கலந்து கொண்டு அரிசி அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கினா்.
இதில் பேசிய திமுக மாவட்ட துணைச் செயலாளா் சேங்கைமாறன் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி இருவரும் திருப்புவனம் பேரூராட்சியைச் சோ்ந்த 16, 17 ஆவது வாா்டுகளின் மின் இணைப்புகளை நகா் பகுதி மின் இணைப்புடன் இணைக்க வேண்டும்.
நீண்ட காலமாக திருப்புவனம் நகரில் பேருந்து நிலையம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா். எனவே திருப்புவனம் நகரில் பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட நிா்வாகமும், அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
அதைத்தொடா்ந்து பேசிய அமைச்சா் பெரியகருப்பன், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
இதே போல் காரைக்குடி சுப்பிரமணியபுரம் நியாயவிலைக்கடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 785 பயனாளிகளுக்கு கரோனா நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தொடக்கி வைத்தாா்.
இதில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பி னா் எஸ். மாங்குடி, மாவட்ட வழங்கல் அலுவலா் ரத்தினவேல், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் சுரேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.