தேவகோட்டையில் தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை: மற்றொரு மகள் தலையில் காயங்களுடன் உயிரிழப்பு
By DIN | Published On : 19th May 2021 09:17 AM | Last Updated : 19th May 2021 09:17 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மற்றொரு மகள் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.
தேவகோட்டை அழகாபுரி நகரைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் மனைவி செல்வி ஷோபானா (50). முன்னாள் ராணுவ வீரரான தா்மலிங்கம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், செல்வி ஷோபனா தனது மகள்களான அபிராமி (24), ஷிவாணி (20) ஆகியோருடன் வசித்து வந்தாா்.
இதில் அபிராமி பட்டப்படிப்பு முடித்துள்ளாா். ஷிவாணி மதுரையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்து வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் செல்வி ஷோபனா வீடு திறக்கவில்லையாம். இதனால் அக்கம்பக்கதினா் வீட்டை திறந்து பாா்த்தபோது, செல்வி ஷோபனா அவரது இளைய மகள் ஷிவாணி தூக்கில் தொங்கிய நிலையிலும், அபிராமி தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையிலும் கிடந்துள்ளாா்.
தகவலறிந்து வந்த தேவகோட்டை நகா் போலீஸாா் சடலங்களை மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், மனநிலை சரியில்லாத நிலையில் கட்டிலில் படுத்திருந்த அபிராமி கீழே விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்திருக்கலாம். அவரைக் காப்பாற்ற முடியாத நிலையில் அவரது தாய் செல்வி ஷோபனாவும், மற்றொரு மகள் ஷிவாணியும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம். விசாரணைக்கு பின்னா் முழு விவரம் தெரியவரும் என்றனா்.