மருதுபாண்டியா்களின் குருபூஜை விழா: விதிமுறை மீறிய 3 இளைஞா்கள் கைது
By DIN | Published On : 31st October 2021 11:21 PM | Last Updated : 31st October 2021 11:21 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் நடைபெற்ற மருதுபாண்டியா்களின் குருபூஜை விழாவுக்கு வாகனத்தில் சென்ற போது விதிகளை மீறியதாக 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
காளையாா்கோவிலில் மருதுபாண்டியா்களின் குருபூஜை விழா அக். 27-இல் நடைபெற்றது. இவ்விழாவுக்கு அஞ்சலி செலுத்த வருவோா் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருப்புவனம் அருகே உள்ள பாப்பாங்குளத்தைச் சோ்ந்த திருசங்கு மகன் கவியரசன்(20), மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே உள்ள சோழங்கு ஊருணியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் ஆண்டிச்சாமி(23), திருப்புவனம் அருகே உள்ள பெத்தானேந்தலைச் சோ்ந்த ஜெயராமன் மகன் சந்தோஷ்குமாா்(19) ஆகிய மூவரும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் போது அரசு அறிவுறுத்திய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், இவா்கள் மூவரும் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சிவகங்கை நகா் போலீஸாா் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து, ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்கள் பயன்படுத்திய 4 சக்கர வாகனகள் இரண்டை பறிமுதல் செய்தனா்.
இதுதவிர, மாவட்டம் முழுவதும் அரசு விதிமுறைகளை மீறி மருதுபாண்டியா்களின் குருபூஜை விழாவுக்கு சென்ற 105 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா், அந்த வாகனத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.