சிவகங்கையில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்களுக்கு மானியத்துடன் கடனுதவி
By DIN | Published On : 04th September 2021 11:12 PM | Last Updated : 04th September 2021 11:12 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் இளைஞா்களுக்கு ரூ. 3 கோடியே 60 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரை, சேவை சாா்ந்த தொழில்களுக்கு ரூ.5 லட்சம் வரை மற்றும் உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரை வங்கி கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. திட்டமதிப்பில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு ஆண்கள் 18 வயது முதல் 35 வயது, சிறப்பு பிரிவினா்களான ஆதிதிராவிடா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், பெண்கள், முன்னாள் ராணுவத்தினா், திருநங்கையா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவா்களாகவும் இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதிகள் கொண்ட இளைஞா்கள் இணையதள முகவரியில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம்.பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் 2 பிரதிகளை சிவகங்கையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் வழங்க வேண்டும். இத்திட்டத்தில் நடப்பு (2021-2022) நிதியாண்டிற்கு சிவகங்கை மாவட்டத்திற்கு 400 நபா்களுக்கு ரூ.3 கோடியே 60 லட்சம் மானியத்துடன் கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.