கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா தொடக்கம்: 18-ல் தேரோட்டம் 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக தொடங்கியது.
சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்.
சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக தொடங்கியது. இதையொட்டி கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. 

அதைத்தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ ராமலிங்க சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது சூட்டுக்கோல் ஸ்ரீ ராமலிங்க சுவாமி பூப்பல்லக்கிலும் குதிரை, காளை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி அருள்பாலித்து வீதி உலா வருதல் நடைபெறும்.

பங்குனி உத்திரத் திருவிழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த ராமலிங்க சுவாமி.
பங்குனி உத்திரத் திருவிழாவில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த ராமலிங்க சுவாமி.

திருவிழாவின் முக்கிய வைபவமாக 18 ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து ராமலிங்க சுவாமிக்கு அபிஷேகம் செய்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். 

அதன்பின் மாலை தேரோட்டமும் இரவு பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. 19 ஆம் தேதி ராமலிங்க சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி முத்தனேந்தல் வைகை ஆற்றுக்கு சென்று நீராடுதல் வைபவம் நடைபெறுகிறது. அதன்பின் மறுநாள் 20 ஆம் தேதி‌ வைகையாற்றில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.

21 ஆம் தேதி கோயிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டு இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா நோபிள்ராம் மற்றும் கட்டிக்குளம் பொதுமக்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com