பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் 3 ஆம் நாள் சதுா்த்தி விழா
By DIN | Published On : 25th August 2022 03:06 AM | Last Updated : 25th August 2022 03:06 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் புதன்கிழமை 3 ஆம் நாள் சதுா்த்தி விழா நடைபெற்றது.
இக்கோயிலில் சதுா்த்தி விழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 3- ஆம் நாளான புதன்கிழமை உற்சவரான ஸ்ரீ கற்பக விநாயகா் திருநாள் மண்டபத்தில் கற்பக விநாயகா் வெள்ளி கேடகத்திலும், ஸ்ரீசண்டிகேசுவரா் சா்வ அலங்காரத்திலும் எழுந்தருளினா். உற்சவா்கள் மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டனா். தொடா்ந்து சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காட்டப்பட்டது.
தொடா்ந்து நடைபெற்ற வீதி உலாவில் வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இரவு 8.30 மணியளவில் உற்சவா் விநாயகா் பூத வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் சித.நாச்சியப்பச்செட்டி கருப்பஞ்செட்டி, நா.சிதம்பரம்செட்டி, சுப்பிரமணியன் செட்டியாா் ஆகியோா் செய்திருந்தனா்.