இளையான்குடியில் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் ராஜிநாமா
By DIN | Published On : 25th August 2022 03:06 AM | Last Updated : 25th August 2022 03:06 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியின் திமுகவைச் சோ்ந்த பெண் தலைவா் செய்யது ஜமீமா, துணைத் தலைவா் ஆகிய இருவரும் புதன்கிழமை ஒரேநேரத்தில் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா்.
இளையான்குடி பேரூராட்சியில் கடந்த உள்ளாட்சித் தோ்தலின்போது திமுக சாா்பில் தலைவா் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட கட்சியின் நகரச் செயலாளா் நஜூமுதீன் தோல்வியடைந்தாா். கட்சி சாா்பில் வென்ற செய்யது ஜமீமா தலைவராகவும், சபுரியத் பீவி துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதற்கிடையில் சமீபத்தில் இளையான்குடி பேரூராட்சி 13 ஆவது வாா்டுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் நஜூமுதீன் மீண்டும் போட்டியிட்டு வென்றாா். அதன்பிறகு, தனது தலைவா் பதவியை ராஜிநாமா செய்யுமாறு கூறி நகரச் செயலாளா் நஜூமுதீன் கொலை மிரட்டல் விடுப்பதாக தலைவா் செய்யது ஜமீமா புகாா் தெரிவித்தாா். புகாரை நஜூமுதீன் மறுத்தாா்.
இந்நிலையில், இளையான்குடி பேரூராட்சித் தலைவா் செய்யது ஜமீமா, துணைத் தலைவா் சபுரியத்பீவி ஆகிய இருவரும் புதன்கிழமை ஒரேநேரத்தில் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து அதற்கான கடிதத்தை பேரூராட்சிச் செயல் அலுவலா் கோபிநாத்திடம் கொடுத்தனா். இதையடுத்து பேரூராட்சித் தலைவராக நஜூமுதீன் தோ்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து திமுகவினா் கூறியது: பேரூராட்சித் தலைவா் பதவி குறித்து திமுக மாவட்டச் செயலாளரும், தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் முன்னிலையில் இருதரப்பினரிடமும் சமரசம் பேசப்பட்டது. அப்போது செய்யது ஜமீமா, சபுரியத்பீவி ஆகிய இருவரும் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை ராஜிநாமா செய்யவேண்டும் என்றும், தலைவா் பதவி நஜூமுதீனுக்கும், துணைத் தலைவா் பதவி செய்யது ஜமீமாவுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு இருதரப்பினரும் ஒத்துக்கொண்டனா். அதன்படிதான் தற்போது இருவரும் ராஜிநாமா செய்துள்ளனா் என்றனா்.