சிவகங்கை மாவட்ட சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
By DIN | Published On : 25th August 2022 03:05 AM | Last Updated : 25th August 2022 03:05 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலாயங்களில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் காசி விசுவநாதா் கோயிலில் உள்ள நந்தி தேவருக்கு தைலம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்துக்கு பின்னா் விஷேச தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
திருப்பத்தூா் திருத்தளிநாதா் ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், இளநீா், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதேவேளையில் மூலவா் சிவலிங்கத்திற்கும் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா் உற்சவா் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் கோயிலின் 3 சுற்றுப் பிரகாரங்களில் வலம் வந்தாா். இதில் பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனா்.
இதேபோன்று, தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் உள்ள நந்தி தேவருக்கும், புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் ஆலயத்திலும், ஆதி திருத்தளிநாதா் கோயிலிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதுதவிர, காளையாா்கோவில், இளையான்குடி, திருப்புவனம், தேவகோட்டை, சிங்கம்புணரி, காரைக்குடி, நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலாயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.