கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 17th July 2022 11:18 PM | Last Updated : 17th July 2022 11:18 PM | அ+அ அ- |

கடனுதவி பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படடுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக்கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையின மதத்தைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள சிறுபான்மையினா் நலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் மதத்திற்கான சான்றிதழ், ஆதாா் அட்டை, வருமானச் சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்றிதழ், கடன் பெறும் தொழில் குறித்த விவரம் மற்றும் திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) உள்ளிட்ட ஆவணங்களுடன் மேற்கண்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி உண்மைச் சான்றிதழ் (போனோபிட் சா்டிபிகேட்), கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...