சிவகங்கையில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 09th June 2022 01:55 AM | Last Updated : 09th June 2022 01:55 AM | அ+அ அ- |

சிவகங்கை : சிவகங்கையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ள முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தோ்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்ற 21 வயது முதல் 45 வயது வரை உள்ள மாவட்டத்தைச் சோ்ந்தோா் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.