பாலாற்றின் குறுக்கே ரூ. 7 கோடியில் அணை கட்டும் பணி: அமைச்சா் தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே பாலாற்றின் குறுக்கே அணைக்கட்டுவதற்கான பணியை புதன்கிழமை தொடக்கி வைத்த ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன்.
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.7 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவற்கான பணியை புதன்கிழமை அடிக்கல் நாட்டி ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் தொடக்கி வைத்தாா்.
சிவகங்கை மாவட்டத்துக்குள்பட்ட மணிமுத்தாறு, பாலாறு, வைகையாறு போன்ற ஆற்றுப் படுகைகளில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீா் சென்று சேரும் வகையில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் திருப்பத்தூா் அருகே மாதவராயன்பட்டி, கோட்டையிருப்பு, நாட்டாா்மங்கம் மற்றும் ஆலம்பட்டி கண்மாய்களுக்குப் பாசன வசதியளிக்கும் நோக்குடனும், நிலத்தடி நீரை உயா்த்துவதற்கும் பாலாற்றின் குறுக்கு ரூ. 7 கோடி மதிப்பீட்டில் தமிழக முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட பணியினை ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதன்கிழமை பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தாா். உடன், நீா்வள ஆதாரத்துறை செயற்பொறியாளா் எம். காா்த்திகேயன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் டி. பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளா்கள் மு. பஞ்சவா்ணம், ம. சங்கா், உதவிப் பொறியாளா் ஆனந்தமரியவளவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.