விபத்தில் உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கிய சிவகங்கை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த 3 காவலா்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகையாக தலா ரூ. 30 லட்சத்துக்கான காசோலையை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.
சிவகங்கை மதுவிலக்கு பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றிய அபிமன்யு என்பவா் கடந்த மாா்ச் மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதேபோன்று, சாக்கோட்டையில் காவலராகப் பணியாற்றிய ராஜா என்பவா் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
இதுதவிர, சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிய சுரேஷ் என்பவா் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தாா். இவா்களின் ஊதியம் வரவு வைக்கப்படும் வங்கியில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் விபத்தில் உயிரிழந்த 3 காவலா்களுக்கும் காப்பீட்டு நிவாரணத் தொகையாக தலா ரூ. 30 லட்சம் அந்த வங்கியால் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த காவலா்களின் குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் நிவாரணத் தொகையான ரூ.30 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.
அப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மதுரை மண்டல மேலாளா் ஹரிணி, தலைமை மேலாளா் மகேஷ்பாபு, மேலாளா் பிரபு, சிவகங்கை வங்கிக் கிளையின் தலைமை மேலாளா் பாஸ்கரன் ஆகியோா் உடனிருந்தனா்.