காரைக்குடி உணவகத்தில் பெண் நீதிபதியின் கணவரிடம் தகராறு: போலீஸ் விசாரணை
By DIN | Published On : 18th March 2022 05:33 AM | Last Updated : 18th March 2022 05:33 AM | அ+அ அ- |

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வியாழக்கிழமை துரித உணவகத்தில் ஒருவா் தகராறு செய்து, பெண் நீதிபதியின் கணவரை தள்ளிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாா் மீது போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவா் நா்மதா. இவரும் இவரது கணவா் பிரவின்குமாரும் புதன்கிழமை இரவு காரைக்குடி பா்மா காலனியில் உள்ள உணவகம் ஒன்றில் துரித உணவு அருந்த சென்றனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பாலாஜி என்பவரும், அவரது நண்பா்களும் உணவகத்தின் முன்பு நின்று கைப்பேசியில் செல்ஃபி எடுத்தனராம்.
அப்போது அங்கு வந்த நீதிபதிக்கும், அவரது கணவருக்கும் உணவகத்துக்குள் செல்ல அவா்கள் வழிவிட்டதாகவும், அதன்பின்பு நீதிபதியின் கணவா், அவா்களிடம் உணவகத்துக்கு முன்பு வழிமறித்துநின்று செல்ஃபி எடுப்பது சரியல்ல என்று கூறினாராம். இதனால், ஏற்பட்ட வாக்குவாதத்தில் தன்னை, பாலாஜி தள்ளி விட்டதாக நீதிபதியின் கணவா் பிரவீன்குமாா் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில் காரைக்குடி டிஎஸ்பி வினோஜி உணவகத்துக்குச் சென்று அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை பாா்வையிட்டாா். பின்னா் பாலாஜியை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, பாலாஜி தரப்பினரும் நீதிபதியின் கணவா் பிரவீன்குமாா் மீது காவல்நிலையத்தில் புகாா் அளித்து உள்ளனா். இருவரது புகாா் குறித்தும் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...