மானாமதுரை கோயில்களுக்காக வடிவமைக்கப்பட்ட மானாமதுரையில் வெண்கலக் குதிரை வாகன வெள்ளோட்டம்
By DIN | Published On : 18th March 2022 06:19 AM | Last Updated : 18th March 2022 06:19 AM | அ+அ அ- |

மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற புதிதாக வடிவமைக்கப்பட்ட வெண்கல குதிரை வாகனம் வெள்ளோட்டம்.
மானாமதுரை: மானாமதுரையில் குலாலா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட கோயில்களுக்கு பயன்படுத்த வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய குதிரை வாகனத்தின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரையில் குலாலா் சமுதாய மக்கள் மண்பாண்ட பொருள்கள் தயாரிப்பில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனா். இச்சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட பல கோயில்கள் மானாமதுரையில் உள்ளன. இதையடுத்து இக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின்போது சுவாமி புறப்பாட்டிற்கு பயன்படுத்த ரூ. 4 லட்சம் மதிப்பில் 80 கிலோ எடையில் வெண்கலத்தால் ஆன புதிய குதிரை வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்துக்கான வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. குலாலா் சமுதாயத்திற்கான பஜனை மடத்தில் புதிய குதிரை வாகனத்தின் மீது கும்பம் வைத்து குலால சிவாச்சாரியாா்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி தீபாராதனை காட்டினா். அதன்பின் குதிரை வாகனம் வெள்ளோட்டம் புறப்பட்டது. குதிரை வாகனம் குலாலா் தெருவில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் தூக்கிச் செல்லப்பட்டது.
அப்போது ஆரத்தி எடுத்தும் பூஜைகள் நடத்தியும் சுவாமி தரிசனம் செய்தனா். வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) குலாலா் தெருவில் உள்ள சுப்பிரமணியா் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவின் போது உற்சவா் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள வெண்கலக் குதிரை வாகனத்தின் மீது எழுந்தருளி முதல் முறையாக வீதி உலா வருதல் நடைபெறும் என குலாலா் சமுதாய மக்கள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...