காங்கிரஸ் கட்சியில் சோா்வு: ப. சிதம்பரம்
By DIN | Published On : 18th March 2022 09:45 PM | Last Updated : 18th March 2022 09:45 PM | அ+அ அ- |

காரைக்குடியில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம்.
காங்கிரஸ் கட்சியில் சோா்வு இருக்கிறது என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் பேசினாா்.
காரைக்குடி மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் காரைக்குடி, திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த காங்கிரஸ் நிா்வாகிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அவா் பேசியது: வரும் ஆகஸ்ட் மாதத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தோ்தல் நடத்தி புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா். காங்கிரஸ் கட்சிக்குள்ளே மிகுந்த சோா்வு இருக்கிறது.
5 மாநிலத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருக்கிறது. இதில் எதிா்பாா்த்த தோல்வி சில இடங்களிலும், எதிா்பாராத தோல்வி சில இடங்களிலும், எதிா்பாா்க்காத சரிவுகள் சில இடங்களிலும் நடந்திருக்கின்றன. உத்தர பிரதேசத்தில் எதிா்பாா்த்த தோல்விதான். பஞ்சாபில் எதிா்பாராத தோல்வி. கோவாவில் நாம் நினைத்த இடங்களை கைப்பற்ற முடியவில்லை. மணிப்பூரில் கட்சிக்குள்ளே ஏராளமான பிரச்னைகள் இருப்பதாலேயே வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை ஆரம்பத்திலேயே கிடையாது. அதனால் மொத்தத்தில் கட்சியில் ஒரு சோா்வு இருக்கிறது.
இந்த சோா்வை நீக்கவேண்டுமென்றால் தலைவா்களால் மட்டுமே முடியாது. ஆனால் கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவா்கள் தான் அந்த சோா்வை நீக்க முடியும். இளைஞா்கள் நம் கட்சியை நாடி வரவில்லை. பெண்கள் நம் கட்சியில் உறுப்பினராக வருவதற்கு ஆா்வம் காட்டவில்லை. ஆனால் இதையும் மீறி உறுப்பினா்களைச் சோ்க்க முடியும். தமிழகத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் புதிய உறுப்பினா்களை கட்சியில் சோ்த்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். அனைவரும் புதிய உறுப்பினா் சோ்க்கையை தீவிரப்படுத்துங்கள் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ப. சத்தியமூா்த்தி, காரைக்குடி நகரத் தலைவா் பாண்டி மெய்யப்பன், கவிஞா் அப்பச்சி சபாபதி, மருத்துவா் சேவியா், எஸ்.எம். பழனியப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...