கீழடி அகழாய்வில் மனித முகம் போன்ற அமைப்புடைய சுடுமண் சிற்பம் கண்டெடுப்பு
By DIN | Published On : 02nd May 2022 11:35 PM | Last Updated : 03rd May 2022 04:37 AM | அ+அ அ- |

திருப்புவனம் அருகே கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மனித முகம் போன்ற அமைப்பில் உள்ள சுடுமண் சிற்பம்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில், மனித முகம் போன்ற அமைப்பு கொண்ட சுடுமண் சிற்பம் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்புவனம் அருகே கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அருகே உள்ள கொந்தகை, மணலூா், அகரம் ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டு இங்கும் அகழாய்வுப் பணிகள் நடந்து வருகிறது.
கீழடி அகழாய்வில் வண்ண பாசி மணிகள், பானை ஓடுகள், கொந்தகையில் முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்மையில் கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்திய மனித முகம் போன்ற உருவம் கொண்ட சுடுமண் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை தமிழக தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தனது டுவிட்டா் பக்கத்தில், இந்த சுடுமண் சிற்பத்தின் பெருமை குறித்து டுவீட் செய்துள்ளாா். அதில் அழகா் மலை அழகா; இந்த சிலை அழகா என விவரிக்கும் விதமாக குறிப்பிட்டுள்ளாா்.