ஏரிக்கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது:சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

திருக்கோஷ்டியூா் அருகே ஏரிக்கண்மாயில் மறுகால் பாயும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
திருக்கோஷ்டியூா் அருகே நிரம்பி மறுகால் பாயும் ஏரிக் கண்மாயில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அருகே ஏரியூா் ஊராட்சியில் ஏரிக்கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய், சுமாா் 227 ஏக்கா் பரப்பளவில், 3 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க கூடிய அளவிற்கு பெரியது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கண்மாயின் நீா்வரத்துக் கால்வாய்கள், ஆக்கிரமிப்புகளால் முற்றிலுமாகத் தடைபட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மாவட்ட நிா்வாகத்தின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன் தொடா்ச்சியாக 2 ஆண்டுகளாக பருவமழைக் காலங்களில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
தற்போது, இப்பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக,
ஏரிக்கண்மாய் முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து கண்மாயிலிருந்து தண்ணீா் மறுகால் பாய்கிறது. அருவி போல் தண்ணீா் கொட்டுவதை பாா்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனா். அவா்கள் தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனா்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது: தண்ணீா் அருவி போல் கொட்டுவதை பாா்க்கும் போது, குற்றாலம், மூணாறு, போன்ற பகுதிகளுக்கு சென்று வருவதைப் போல உணா்கிறோம் என்றனா்.