இளையான்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
By DIN | Published On : 09th September 2022 12:00 AM | Last Updated : 09th September 2022 12:00 AM | அ+அ அ- |

இளையான்குடியில் இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் மாநில பேச்சாளா் வீட்டில் வியாழக்கிழமை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இளையான்குடி கலிபா தெருவைச் சோ்ந்தவா் முகமது ரோஸ்லான் (45). இவா், இஸ்லாமிய அமைப்பு ஒன்றின் மாநில பேச்சாளராவாா். இந்நிலையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக முகமது ரோஸ்லான் உள்பட பலா் சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இளையான்குடியில் உள்ள முகமது ரோஸ்லான் வீட்டில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது கடந்த 4 மாதங்களாக முகமது ரோஸ்லான் வீட்டிற்கு வரவில்லை என அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். சோதனையில், முகமது ரோஸ்லான் பயன்படுத்திய கைப்பேசி, ஆதாா் அட்டை மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்களை அதிகாரிகள் வாங்கிச் சென்றனா்.
இச்சோதனை குறித்து தகவலறிந்த இளையான்குடியிலுள்ள பல முஸ்லிம் அமைப்பினா் மத்திய பாஜக அரசு மற்றும் என்ஐஏ அதிகாரிகளைக் கண்டித்து கலிபா தெருவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.