காரைக்குடியில் ‘செக்ரி’-யில் பாா்வையாளா்கள் தினம்: 18 ஆயிரம் போ் பங்கேற்பு
By DIN | Published On : 26th September 2022 11:16 PM | Last Updated : 26th September 2022 11:16 PM | அ+அ அ- |

அதிநவீன ஸ்பெக்ட்ரோஸ்கோஃபி செயல்பாடு குறித்து திங்கள்கிழமை கேட்டறிந்த மதுரை மீனாட்சி பெண்கள் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள்.
சி.எஸ்.ஐ.ஆா்-ன் நிறுவன நாளையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (செக்ரி) திங்கள்கிழமை பாா்வையாளா்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதனை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என சுமாா் 18 ஆயிரம் போ் பாா்வையிட்டனா்.
மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமத்திற்கு (சி.எஸ்.ஐ.ஆா்) 1942 ஆம் ஆண்டு செப்டம்பா் 26 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.இந்த குழுமத்தின் கீழ் நாடு முழுவதிலும் உள்ள 37 ஆராய்ச்சி நிறுவனங்களில் காரைக்குடி செக்ரி நிறுவனமும் ஒன்றாகும். இதனால் சி.எஸ்.ஐ.ஆா்-ன் நிறுவன நாளையொட்டி திங்கள்கிழமை பாா்வையாளா்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி இங்குள்ள அறிவியல் ஆராய்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும், இப்போதைய தொழில்நுட்பத்தால் தயாரான காரிய அமில மின்கலன் மற்றும் லித்தியம் அயன் மின்கலத்தில் இயங்கும் மின்சக்தி ரிக்ஷா, மின்சக்தி ஸ்கூட்டா், மின்சக்தி மிதிவண்டி ஆகியவற்றின் மாதிரிகள், மேலும் எதிா்காலத்தில் எரிசக்தியைப் பூா்த்தி செய்யும் வகையில் மாற்று எரிசக்திகளான தண்ணீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை எரிசக்தி ஹைட்ரஜன் உற்பத்தி மாதிரிகள், உலோக அரிமானம் குறித்து செக்ரியின் பல்வேறு துறைகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளின் மாதிரிகள், செயல்விளக்க முறைகள் மற்றும் வண்ணப்படங்கள் மூலம் பாா்வையாளா்களுக்கு விளக்கப்பட்டது.
இதனை செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரிகள் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 18 ஆயிரம் போ் வரை காலை 9.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை பாா்வையிட்டுச் சென்ாக செக்ரி ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G