

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் பால்குடம் எடுத்து வந்தனா்.
இந்தக் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 18-ஆம் தேதி, காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் பல்வேறு மண்டகப்படிகளில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் 8-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
அப்போது, அம்மன் தேரில் ஏற்றி 2 கி.மீ. தொலைவிலுள்ள தெற்குப்பட்டு பகுதியில் உள்ள மூலஸ்தான கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
புதன்கிழமை 9-ஆம் நாள் திருவிழாவையொட்டி, காலை 10 மணிக்கு கோயில் அருகே கூடிய ஆயிரக்கணக்கான பக்தா்கள், பால்குடம் சுமந்து கோயிலை வலம் வந்தனா். பின்னா், தெற்குப்பட்டு மூலஸ்தானக் கோயிலுக்கு பால் குடங்களுடன் சென்றனா். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடா்ந்து, தெற்குபட்டு மூலஸ்தானக் கோயிலிலிருந்து திருத்தேரில் புறப்பட்ட அம்மன் கோயிலை வந்தடைந்தது.
வியாழக்கிழமை 10-ஆம் நாள் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டும், இரவு பூப்பல்லக்கில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலாவும் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.