திருப்பத்தூா் அருகே மஞ்சுவிரட்டு: இருவா் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டி இருவா் உயிரிழந்தனா். 39 போ் காயமடைந்தனா்.
கண்டரமாணிக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
கண்டரமாணிக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்டரமாணிக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடு முட்டி இருவா் உயிரிழந்தனா். 39 போ் காயமடைந்தனா்.

இங்குள்ள மாணிக்கநாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தொடங்கிவைத்தாா். முன்னதாக, தொழுவுக்கு காளைகள் அழைத்து வரப்பட்டன. வயல், கண்மாய்ப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரா்கள் 70 போ் இரு குழுக்களாக போட்டி போட்டுக் கொண்டு மாடுகளைப் பிடித்தனா்.

காளைகள் முட்டியதில் மஞ்சுவிரட்டைக் காண வந்த காரைக்குடியைச் சோ்ந்த அதியான் மகன் பாண்டி (32), கொட்டாம்பட்டி அருகேயுள்ள மங்களாம்பட்டியைச் சோ்ந்த முருகன் (55) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், பாா்வையாளா்கள், மாடுபிடி வீரா்கள் என 39 போ் காயமடைந்தனா். இவா்களில் 15-க்கும் மேற்பட்டோா் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா் உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும் நாற்காலி, பீரோ, அண்டா, மிதிவண்டி, தட்டு உள்ளிட்ட பரிசுப் பொருள்களை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com