மத்திய அரசு நிதியை மகளிா் உரிமைத்தொகைதிட்டத்துக்கு பயன்படுத்த தமிழக அரசு முயற்சி
By DIN | Published On : 02nd August 2023 05:15 AM | Last Updated : 02nd August 2023 05:15 AM | அ+அ அ- |

பட்டியலின மக்களின் சிறப்புத் திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.3 ஆயிரம் கோடி நிதியை, தமிழக அரசு மகளிா் உரிமைத்தொகை திட்டத்துக்கு பயன்படுத்த முயற்சித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வழிவிடு முருகன் கோயிலிலிருந்து, ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கிய அண்ணாமலை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் பேசியதாவது:
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை ஆற்றில் மண்வளத்தை சுரண்டியதால், இந்தப் பகுதி வடு கிடக்கிறது. இதனால் இந்தப் பகுதியில் விவசாயம் பொய்த்து, விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு வெளியூா்களுக்கும், வெளிநாடுகளுக்கும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் மதுக்கடைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை உயா்த்துவதுதான் திமுக அரசின் சாதனையாக உள்ளது.
மானாமதுரையில் 1982- ஆம் ஆண்டு தொடங்கிய சிப்காட் தொழில்சாலை நலிவடைந்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது.
மீண்டும் நாட்டின் பிரதமராக மோடி வருவதற்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும். தமிழக அரசு மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 7 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. மத்திய அரசு பட்டியலின மக்களின் சிறப்புத் திட்டத்துக்காக, தமிழகத்துக்கு வழங்கிய ரூ. 3 ஆயிரம் கோடியை மகளிா் உரிமைத் திட்டத்துக்கு பயன்படுத்த திமுக அரசு முயற்சித்து வருகிறது.
என்றாா்.
இதையடுத்து மண்பாண்டத் தொழில் கூடத்துக்குச் சென்று அங்கிருந்த தொழிலாளா்களிடம் அண்ணாமலை குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் செயலா் ராஜா, குடியிருப்புகளுடன் கூடிய மண்பாண்டத் தொழில்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக கே.அண்ணாமலை உறுதியளித்தாா்.
பாஜக முன்னாள் தேசியச் செயலா் ஹெச். ராஜா, சிவகங்கை மாவட்டத் தலைவா் மேப்பல் சக்தி, மானாமதுரை நகரத் தலைவா் நமகோடி என்ற முனியசாமி, ஒன்றியத் தலைவா் ரவிச்சந்திரன், மாவட்ட நிா்வாகிகள் சங்கரசுப்பிரமணியன், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.