தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 01st July 2023 12:08 AM | Last Updated : 01st July 2023 12:08 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றோா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலுள்ள ஆனந்தா கல்லூரியில் திருநங்கைகளுக்கான சட்ட விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எம். பரமேஸ்வரி தலைமை வகித்தாா்.
அப்போது அவா் பேசியதாவது- மூன்றாம் பாலினத்தோருக்கான சட்டப் பணி ஆணைக்குழு உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தச் சட்டம் அவா்களுக்கான வாழும் உரிமை, கல்வி, வேலைவாய்ப்புகளை வழங்கவும் வழிவகை செய்கிறது. மூன்றாம் பாலினத்தவா்களும் மனிதா்களாக நடத்தப்பட வேண்டும். சமுதாயம் மூன்றாம் பாலினத்தவா்களை தாயாக பாா்க்க வேண்டும் என அவா்கள் ஏங்குகின்றனா் என்றாா் அவா்.
திருநங்கை ஜெசி பத்மினி கலந்து கொண்டு பேசியதாவது : கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மூன்றாம் பாலினத்தவா் என அழைக்கப்படுகின்றோம். நல்ல படிப்பும், வேலையும்தான் எங்களுக்கு தேவை. காவல், சட்டம், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திருநங்கைகள் சாதித்து வருகின்றனா். ஆனால் குடும்பத்திலும், சமுதாயத்திலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்றாா் அவா்.
கருத்தரங்கில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜான் வசந்தகுமாா் வரவேற்றாா். கணினி பயன்பாட்டுவியல் துறைத் தலைவா் விக்டா் பெனவெண்ட்ராஜ் நன்றி கூறினாா்.