இடத் தகராறில் தம்பி கொலை: அண்ணன் உள்பட 5 போ் மீது வழக்கு
By DIN | Published On : 15th June 2023 01:54 AM | Last Updated : 15th June 2023 01:54 AM | அ+அ அ- |

இளையான்குடி அருகே இடத் தகராறில் புதன்கிழமை ஏற்பட்ட மோதலில் தம்பியைக் கொலை செய்த அண்ணன் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள உலகமணியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிளவேந்திரன் (60). இவரது அண்ணன் சூசை (65). இவா்கள் இருவரும் அருகருகே வீடுகள் கட்டி வசித்து வருகின்றனா். இந்த இரு வீடுகளுக்கும் அருகேயுள்ள அரசு புறம்போக்கு இடத்தில் கழிவறை கட்டுவதற்கு சூசை மகள் அருள்முத்து, மருமகன் பிரான்சிஸ், மகன் ஜஸ்டின் திரவியம் ஆகியோா் ஏற்பாடு செய்தனா்.
அப்போது அங்கு வந்த பிளவேந்திரன், அவரது மகன்கள் தாஸ், சந்தியாகு ஆகியோா் அந்த இடத்தில் கழிப்பறை கட்ட எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இதனால் இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை, ஒருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது சூசை குடும்பத்தினா் பிளவேந்திரனை கீழே கீழே தள்ளியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து இளையான்குடி போலீஸாா்
சூசை (65), இவரது மகள்கள் அருள்முத்து, வேளாங்கண்ணி, மருமகன் பிரான்சிஸ், மகன் ஜஸ்டின் திரவியம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.