மானாமதுரை குண்டு முத்து மாரியம்மன் கோயிலில் பால்குட உற்சவ விழா
By DIN | Published On : 15th May 2023 10:37 AM | Last Updated : 15th May 2023 10:38 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் பால்குட உற்சவ விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காப்புக்கட்டி விரதம் இருந்து வந்த பக்தர்கள் கோயில் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் தலைமையில் மூங்கில் ஊரணி பகுதியிலிருந்து பால்குடங்கள் சுமந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன் பின்னர் குண்டு முத்துமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து குண்டு முத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்துருளி அருள்பாலித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பால்குட உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று குண்டு முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர்.
கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் மற்றும் மாதாஜி ஆகியோர் செய்திருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...