ஏரியூரில் மஞ்சுவிரட்டு : 35 போ் காயம்
By DIN | Published On : 22nd May 2023 06:20 AM | Last Updated : 22nd May 2023 06:20 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ஏரியூரில் முனிநாதா் ஆலயத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இந்த மஞ்சு விரட்டை இரண்டாம் ஆண்டாக
ஏரியூா், ஆபத்தாரணப்பட்டி, வலையபட்டி, உலகினிபட்டி, கணேசபுரம், தேத்தாம்பட்டி, கலிங்கப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த இளைஞா்கள் சோ்ந்து நடத்தினா்.
இதில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டு வாடிவாசலில் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இந்தக் காளைகளை 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் அடக்கினா்.
மஞ்சுவிரட்டின் போது காளைகள் முட்டியதில் 35 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலத்த காயமடைந்த 3 போ் தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.