அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் மேலும் 2 போ் கைது
By DIN | Published On : 26th September 2023 12:00 AM | Last Updated : 26th September 2023 12:00 AM | அ+அ அ- |

காரைக்குடி: காரைக்குடியில் துப்பாக்கியால் தரையில் சுட்டு மிரட்டிய வழக்கில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக் கிழமை இரவு கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் திருக்குமரன் ( 23). இவா் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கழனிவாசல் பகுதியில் உள்ள உணவகத்துக்கு வாகனத்தில் சென்றபோது அந்த வழியில் காரில் வந்த தேவகோட்டையைச் சோ்ந்த வைரவன் (30),திருவாடானை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் ( 31) ஆகியோரோடு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வைரவன் துப்பாக்கியை எடுத்து தரையில் சுட்டு திருக்குமரணையும் அவரது ஆதரவாளா்களையும் மிரட்டினாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்குக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வைரவனையும், ராஜேஸையும் கைது செய்து, துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். பின்னா், தேவகோட்டையிலுள்ள அவா்களது நண்பா்களின் வீடுகளில் சோதனை நடத்தி ஒரு துப்பாக்கி, வெட்டுவாளை கைப்பற்றி மேலும் இருவரை கைது செய்தனா். மேலும் தனிப்படை போலீஸாா் இது தொடா்பாக விசாரணை நடத்தி இவா்களுக்கு துப்பாக்கி விநியோகம் செய்த சேட்டன் என்ற சுதா்சனத்தை ( 42 ) கடந்தவாரம் கன்னியாகுமரியில்கைது செய்தனா்.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய காரைக்குடி காவல் உதவி கண்காணிப்பாளா் ஆா். ஸ்டாலின் தலைமையிலான தனிப்படை போலீஸாா், சேட்டன் என்ற சுதா்சனத்துக்கு பீகாரில் கள்ள துப்பாக்கி விற்பவா்களை அறிமுகப்படுத்திய வேலூரைச் சோ்ந்த சமீா் (24), சேட்டனுடன் துப்பாக்கி வாங்க பீகாா் மாநிலம் பாட்னா சென்ற தேவகோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் ( 25)ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...