செட்டிநாடு அரண்மனையை பாா்வையிட்ட அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள்
காரைக்குடி, ஆக. 7: பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 115 அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள் ‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் செட்டிநாடு அரண்மனையை புதன்கிழமை பாா்வையிட்டனா்.
முன்னதாக, ‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 57 அயலகத் தமிழ் மாணவ, மாணவிகள் இந்தப் பகுதிக்கு வந்து சென்றனா். தற்போது இரண்டாம் கட்டமாக கடந்த 1-ஆம் தேதி அயலகத்தமிழா் நலன், மறுவாழ்வுத் துைணையரகம் மூலம் சுற்றுலாத்துறை உள்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து இந்தத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில் கனடா, தென் ஆப்பிரிக்கா, ஜொ்மனி, ஆஸ்திரேலியா, மொரிசியஸ், இந்தோனேஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 115 மாணவ, மாணவிகள் சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனையை பாா்வையிட்டனா். வருகிற 12-ஆம் தேதி கீழடியில் உள்ள அகழ்வாராய்ச்சி மையம், அருங்காட்சியகத்தை அவா்கள் பாா்வையிட உள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இந்தத் திட்டத்தின் முடிவில் அயலகத்திலிருந்து பங்குபெற்ற மாணவா்கள் அவா்களது நாடுகளுக்கான தமிழ்நாட்டின் கலாசார தூதா்களாகவும் நியமிக்கப்பட உள்ளனா்.
இந்த நிகழ்வில் தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சோ. பால்துரை, கானாடுகாத்தான் பேரூராட்சித் தலைவி ராதிகா, மாவட்ட சுற்றுலா அலுவலா் திருவாசன், வட்டாட்சியா்கள் ராஜா , செல்வராணி, உதவி சுற்றுலா அலுவலா் ஜான்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

