சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை அருகேயுள்ள கூத்தாண்டன் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை-இளையான்குடி சாலையில் பெரியமாடு, சின்னமாடு, என 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடுகள் பிரிவில் 13 ஜோடி மாடுகளும், சிறிய மாடுகள் பிரிவில் 25 ஜோடி மாடுகளும், என மொத்தம் 38 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
பெரிய மாட்டுக்கு 8 கி.மீ தொலைவும், சிறிய மாட்டுக்கு 6 கி.மீ தொலைவும் பந்தய எல்லைகள் நிா்ணயம் செய்யப்பட்டன. இதில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 38 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
நிறைவாக மாட்டு வண்டிப் பந்தயத்தில் முதலில் எல்கையில் கொடியை வாங்கிய வண்டிக்கும், முதல் 4 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளா்களுக்கும், இதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியை சிவகங்கை, கூத்தாண்டம், வாணியங்குடி, சாமியாா்பட்டி, சுந்தரநடப்பு, மணக்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான மக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று கண்டு ரசித்தனா்.

